×

ஆந்திராவில் வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம் தொண்டர்கள் ரகளை: நாற்காலிகளை தூக்கி வீசியதால் பதற்றம்

குண்டூர்: ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தெலுங்கு தேச தொண்டர்கள் திடீரென ரகளையில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 6 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு பாதுகாப்பாக நடைபெற்று வந்தாலும், சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவ்வாறு குண்டூர் மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் புகுந்த தெலுங்கு தேசம் தொண்டர்கள் அங்கிருந்த வாக்கு இயந்திரங்கள் மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.

ஏனெனில், நரசராவ்பேட்டை வாக்குச்சாவடியில் இருந்த இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, இயந்திரங்களை பார்க்க தங்களை அனுமதிக்குமாறு தேர்தல் அதிகாரிகளிடம் தெலுங்கு தேசம் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், வாக்குச்சாவடியில் இருந்த இயந்திரங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதையடுத்து, ரகளையில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இதுவரை அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததாக எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இந்த ரகளை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு அங்கு வாக்குப்பதிவு மீண்டும் நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : speaking volunteers ,Voting Chowk ,Andhra Pradesh , Andhra Pradesh, polling, Telugu speaking volunteers, clash
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...